எகிப்தில் சமைக்காத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக மரணம்

எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சமைக்கப்படாத மூன்று பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை சாப்பிட்டதால், ஹம்சா எனும் 13 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட நூடுல்ஸ் சிறுவனின் உடலில் இருந்து தண்ணீரை உறிஞ்சி, கடுமையான குடல் அடைப்பை ஏற்படுத்தியதாக நம்பப்படுகிறது.
கடந்த வாரம், தனது வீட்டில் மயக்கமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் இறப்பதற்கு முன்னதாக பச்சையான நூடுல்ஸ் மூன்று பைகள் சாப்பிட்டதைப் புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவத்தில் வன்முறை தொடர்பான எவ்விதமான அறிகுறிகளும் இல்லை.
நூடுல்ஸ் தயாரிப்புகள் சுகாதார தரங்களை பூர்த்தி செய்தவை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், கடுமையான நீரிழப்பே அவசரமான குடல் அடைப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இறுதி முடிவுக்கு பிரேத பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் சமூக ஊடகத்தில் பரவும் ராமன் ரா சவால் எனப்படும் டிக்டாக் சவாலுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதில் பங்கேற்கும் பலரும் பச்சையான உடனடி நூடுல்ஸை சமைக்காமல் சாப்பிடும் வீடியோக்களைப் பதிவேற்றுகிறார்கள்.
தற்போது இந்த சவால் மில்லியன் கணக்கான பார்வைகளை ஈர்த்துள்ள நிலையில், பெற்றோர்களும், சுகாதார நிபுணர்களும் கடும் கவலையைத் தெரிவித்து வருகின்றனர்.