ஆஸ்திரேலியாவில் 100 ஆண்டுகளுக்கு பின் கண்டறியப்பட்ட போத்தல் – இரு போர் வீரர்களின் செய்தி!
முதலாம் உலகப் போரின் போது பிரான்ஸின் போர்களங்களுக்கு அனுப்பப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இருவர் எழுதிய கடிதம் ஒன்று நூறு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் உள்ள எஸ்பெரன்ஸ் (Esperance)அருகே உள்ள கடற்கரையொன்றில் இருந்து குறித்த போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கண்ணாடி குவளையொன்றில் ஆகஸ்ட் 15, 1916 என்று திகதியிடப்பட்ட 27 வயதான மால்கம் நெவில் (Malcolm Neville) மற்றும் 37 வயதான வில்லியம் ஹார்லி (William Harley) ஆகிய இரு வீரர்கள் பென்சிலால் எழுதிய கடிதம் ஒன்றே இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ளது.
அந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் திகதி, அவர்களின் துருப்புக்கள் HMAT A70 பல்லாரட் (Ballarat) என்ற கப்பலில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டுள்ளனர்.
இந்த பயணம் குறித்து தனது தாயிற்கு உருக்கமாக எழுதிய மால்கம் நெவில் (Malcolm Neville) “ உண்மையிலேயே நான் நல்ல நேரத்தை அனுபவித்து வருகிறேன். இதுவரை நல்ல உணவு கிடைத்துள்ளது. கப்பல் எங்கோ இருக்கிறது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
போரில் பற்கேற்ற மால்கம் நெவில் (Malcolm Neville) ஒருவருடம் கழித்து போர் களத்தில் கொல்லப்பட்டுள்ளார். வில்லியம் ஹார்லி (William Harley) படுகாயம் அடைந்திருந்தாலும் உயிர் தப்பினார். இருப்பினும் புற்றுநோயால் உயிரிழந்ததாக ஏபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.





