இலங்கையில் வெடிகுண்டு அச்சுறுத்தலால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு: ஒருவர் கைது
வெடிகுண்டு பீதி காரணமாக கண்டி நீதிமன்ற வளாகத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான (119) அநாமதேய அழைப்பை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அழைப்பின் பேரில், இலங்கை இராணுவத்தின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, இலங்கை காவல்துறையுடன் இணைந்து நீதிமன்ற வளாகத்திற்குள் விரிவான பாதுகாப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது.
அதன்படி, இன்று விசாரணைக்கு வரவிருந்த அனைத்து வழக்குகளும் ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அவசர இலக்கமான 119 ற்கு தொலைபேசி அழைப்பு விடுத்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழைப்பு விடுக்கப்பட்ட சிம் அட்டையின் உரிமையாளர் கினிகத்தேன – கடவல பகுதியில் வைத்து கைதானதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், நேற்றுமுதல் தமது தொலைபேசி காணாமல் போயுள்ளதாக 53 வயதுடைய குறித்த சந்தேகநபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹட்டன் வலயத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.