மங்கலாகிச் சென்ற பார்வை… மருத்துவ சோதனையில் 7 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வடக்கு லண்டனின் ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியின் பார்வை மங்கலாக தெரிய, மருத்துவ சோதனையில் கண்டறிந்த தகவல் மொத்த குடும்பத்தையும் உலுக்கியுள்ளது.
ஹாரோ பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி சாரா அதிஃப் என்பவர் தமது கண் பார்வை மங்குவதையும் சோர்வாக இருப்பதை அடிக்கடி தமது தாயாரிடம் கூறி வந்துள்ளார். இது அவரது தாயார் உரோஸ் என்பவருக்கு கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியது.இதனையடுத்து சிறுமி சாரா கண் பரிசோதனைக்காக மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாள். ஆனால் அவளுடைய பார்வையை விட பிரச்சனை மிகவும் தீவிரமானது என்பது விரைவில் தெளிவாகியது.
2022 டிசம்பர் மாதத்தில் இருந்தே சிறுமி சாராவுக்கு இப்படியான பார்வை கோளாறு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி அவர் அடிக்கடி சோர்வாகவும் காணப்பட்டுள்ளார். ஜனவரி 27ம் திகதி விரிவான பரிசோதனைக்கு பின்னர், சிறுமி சாரா மூளை கட்டியால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சாரா Great Ormond Street மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவரது வலது பக்கத்தைப் பயன்படுத்த முடியாமல் போனது. மட்டுமின்றி இரத்த உறைவுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் பிசியோதெரபி சிகிச்சைக்குப் பிறகு சக்கர நாற்காலியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அந்த அறுவைசிகிச்சைக்கு பின்னர் சாரா குணமடைவார் என நம்பியிருந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது உயர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் முயற்சி மேற்கொள்ளும் பொருட்டு, பொதுமக்களிடம் இருந்து அந்த குடும்பம் நிதி திரட்டி வருகிறது. நெதர்லாந்தில் தொடர்புடைய சிகிச்சைக்காக மாதம் 60,000 பவுண்டுகள் தேவைப்படும் என கூறுகின்றனர்.