ஜெர்மனியின் பல இடங்களில் இரத்தத்தினால் வரையப்பட்ட குறியீடு – மர்ம நபர்களை தேடும் காவல்துறை!
ஜெர்மனியின் (German) ஹனாவ் (Hanau) நகரின் பல பகுதிகளில் இரத்தினால் எழுதப்பட்ட ஸ்வஸ்திகா (swastikas) குறியீடு (பிள்ளையார் சுழி) பொறிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்கள் மற்றும் கார்கள் என 50 இற்கும் மேற்பட்ட இடங்களில் மேற்படி குறியீடு பொறிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வஸ்திகா குறியீடு மனித இரத்தினால் வரையப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன.
சம்பவங்களின் பின்னணி முற்றிலும் தெளிவாக இல்லை என்றும், யார் பொறுப்பு அல்லது இரத்தம் யாருடையது என்பதை இனங்காணவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெர்மனியில் நாஜி சின்னங்களைக் காண்பிப்பது சட்டவிரோதமானது என்பதால், சொத்து சேதம் மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான அமைப்புகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





