இந்தியாவில் மேற்கு வங்கத்தில் கட்சி அலுவலகத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பாஜக தலைவர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் (பாஜக) தலைவர் ஒருவர் அக்கட்சியின் அலுவலகத்தில் உயிரிழந்து கிடந்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள உஸ்தி நகரில் இருக்கும் பாஜக அலுவலகத்தில் பிருத்விராஜ் நஸ்கார் என்பவரின் சடலம் காணப்பட்டது. அந்நகர் இருக்கும் மாவட்டத்தில் பாஜகவின் சமூக ஊடகக் கணக்கை அவர் கவனித்து வந்தார் என்று இந்தியா டுடே உள்ளிட்ட ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக, மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறைகூறியது. அதேவேளை, பிருத்விராஜ் நஸ்காரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பின்னால் தனிப்பட்ட காரணங்கள் இருக்கக்கூடும் என்று தெரிவித்தனர்.
ரத்தத்தில் ஊறியபடி இருந்த நஸ்காரின் உடல், வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 8) கட்சி அலுவலகத்தில் காணப்பட்டது. இம்மாதம் ஐந்தாம் திகதியிலிருந்து நஸ்காரைக் காணவில்லை என்று அவரின் குடும்பத்தார் கூறியிருந்தனர்.
நஸ்காரைக் கூரான ஆயுதங்களால் தாக்கியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாகவும் கைதான பெண் ஒப்புக்கொண்டார் என்று காவல்துறை தெரிவித்தது. உயிரிழந்தவருக்கும் கைதானவருக்கும் இருக்கக்கூடிய தொடர்பு, அவர்களுக்கிடையே ஏற்பட்டிருக்கக்கூடிய தகராறு போன்ற கண்ணோட்டங்களில் விசாரணை நடத்துவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.