பதுங்கு குழிகளிலிருந்து மீளும் நம்பிக்கை; பெத்லகேமில் பாரம்பரிய ஊர்வலம் மீண்டும் ஆரம்பம்
காஸா பகுதியில் நிலவும் தற்காலிக போர்நிறுத்தத்திற்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீண்டும் உற்சாகமாகத் தொடங்கியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக போரினால் முடக்கப்பட்டிருந்த கொண்டாட்டங்கள், இந்த ஆண்டு பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பாரம்பரிய ஊர்வலங்களுடன் களைகட்டியுள்ளன.
ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் (Bethlehem) நோக்கிய இந்தப் பாரம்பரிய ஊர்வலத்தை கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிசாபல்லா (Cardinal Pierbattista Pizzaballa) தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்.
சமீபத்தில் காஸாவிற்கு விஜயம் செய்திருந்த அவர், அங்குள்ள சிறிய கிறிஸ்தவ சமூகத்தின் வாழ்த்துகளைப் பெத்லகேம் மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
காஸாவில் மக்கள் இன்னும் தற்காலிக கூடாரங்களில் குளிருடன் போராடி வரும் சூழலிலும், இடிபாடுகளுக்கு மத்தியில் மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்ப அவர்கள் துடிப்பதாக அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
“நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒளியாக இருக்கத் தீர்மானிப்போம்” எனக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் இருளை நீக்கும் ஒளியாக அமைய வேண்டும் எனத் தனது பிரார்த்தனையின் போது வலியுறுத்தினார்.




