செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
பெரிய மருத்துவ வசதிகளற்ற அந்தக் காலத்தில் கற்களும் முள்ளும் கால்களைப் பதம் பார்த்து விடாமல் தடுக்க, முனிவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை தங்கள் பாதங்களுக்கு பாதரட்சைகளை அணிந்து கொண்டனர்.
காரணம், வெறும் காலில் நடப்பதில் உள்ள பிரச்னைகளை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர். அதைத் தொடர்ந்து, அறிவியல் அறிவு விசாலமாகி, நாளடைவில் நோய்கள் பெருகப் பெருக மண்ணில் நடக்கும்போது அதிலுள்ள அசுத்தங்கள் மற்றும் கிருமிகள் கால்களின் வழியே உடலுக்கு ஏறாமல் இருக்க தினமும் அணியும் வண்ணம் செருப்புகளைக் கண்டுபிடித்தனர்.
ஆனால் இப்போதோ, வெளியில் செல்லும்போது மட்டுமே அணிந்து வந்த செருப்பு, கால்வலி காரணமாக இன்று வீட்டுக்குள் உணவருந்தும்போதும்கூட அணியும் அளவுக்கு மக்களோடு ஒன்றிப் பிணைந்து விட்டது. அதிலும் அவரவர் வசதிக்கேற்றவாறு விலையுயர்ந்த செருப்பு வகைகள் தற்சமயம் ஏராளம்.
இன்று ஒருவர் என்ன வகையான செருப்பை அணிந்துள்ளார் என்பதை வைத்து அவரின் வசதியை தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலத்தில் வெறும் காலில் நடப்பவர்களை ஏளனமாகப் பார்க்கும் மனப்பான்மை அதிகரித்துள்ளது. ஆனால், காலில் செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதில் உள்ள ஆரோக்கியப் பலனைத் தெரிந்து கொண்டால் நாமும் நிச்சயம் அதனைப் பின்பற்றுவோம்.
ஆம், வெறும் காலில் சிறிது நேரமாவது நடப்பது உடல் இயக்கத்துக்கு அவசியமான இரத்த ஓட்டத்துக்கும் ஆரோக்கியமான வாழ்வுக்கும் உதவுகிறது என்பதை நவீன மருத்துவ உலகமும் ஒப்புக்கொள்கிறது. கரடு முரடான தரையில் நடக்கும்போது பாதத்தில் நேரடியாக அழுத்தம் ஏற்படுகின்றது. இது உடற்செயல்பாட்டை ஊக்குவிக்கிறது என்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாதத்தில் அமைந்த விரல்கள் முதல் குதிகால் வரை உள்ள நரம்புகள், மூளை, இதயம், சிறுநீரகம் என உடலின் அனைத்து உறுப்புகளுடனும் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளன. அதனால் பாதத்தில் ஏற்படும் அழுத்தம் அதனுடன் தொடர்புடைய உறுப்பின் செயலாற்றலை துரிதப்படுத்தி உடலுக்கு நலம் தருகிறது. ஆகவேதான், செருப்பில்லாமல் நடப்பதை ஆன்மிகம் முக்கியமாக அறிவுறுத்துகிறது. கோயிலுக்கு வரும்போது செருப்புகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். காரணம், அங்கு இருக்கும் சக்தி நம் கால்களின் வழியே சென்று உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது.
தற்போது நடைப்பயிற்சி செய்ய உருவாக்கப்பட்டுள்ள பூங்காக்களில் வெறும் கால்களுடன் நடக்க ஏதுவாக புல் தரைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரையில் எச்சில் துப்பும் பொறுப்பற்ற சிலரால் வெறும் காலில் நடப்பதைத் தவிர்ப்பவர்கள், இதுபோன்ற இடங்களைப் பயன்படுத்தலாம். வீட்டு மொட்டை மாடித் தரைகளும் வெறும் காலில் நடைப்பயிற்சி செய்ய ஏதுவானவைதான்.
பாதத்தில் ஊசிகளை குத்தி செய்யும் அகுபங்சர் எனும் சீன சிகிச்சையை அறிவோம். அதன் பொருளே செருப்பில்லாமல் வெறும் காயில் நடப்பதுதான் என்றால் மிகையில்லை. ஆகவே, இயற்கை நமக்களித்திருக்கும் பெரும் கொடையான மண்ணில் செருப்பின்றி வெறும் காலில் தினம் சிறிது நேரம் நடப்போம். நலமுடன் வாழ்வோம்.