தேசத்துரோக குற்றத்திற்காக 17 இஸ்கான் உறுப்பினர்களின் வங்கி கணக்குகளை முடக்கிய பங்களாதேஷ்

வங்கதேசத்தில் மேலும் 3 கோயில்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இஸ்கான் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை பார்க்கசென்ற இன்னொரு பூசாரி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் பழைய இடஒதுக்கீடு முறை தொடர்பாக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இதில் பலர் உயிரிழந்தனர். பிரதமர் பதவியை ராஜினாமாசெய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இடைக்கால அரசு பதவியேற்ற பிறகு, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கோயில்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதற்கு எதிராக இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் தாஸ் தலைமையில் பல்வேறு போராட்டங்கள், ஊர்வலங்கள் நடைபெற்று வந்தன.
இந்த சூழலில், போராட்டத்தை தடுக்கும் விதமாக, சின்மோய் கிருஷ்ணதாஸை தேச துரோக வழக்கில் வங்கதேச அரசு கைது செய்தது. அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டோகிராம் (சிட்டகாங்) பகுதியில் கடந்த 29ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொழுகை முடிந்த பிறகு, சந்தானேஷ்வரி மாத்ரி கோயில், சனீஸ்வரன் கோயில், காளி கோயில் ஆகிய 3 கோயில்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில், கோயில்கள் சேதம் அடைந்தன.
திடீரென வந்த ஒரு கும்பல் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கோயில் நிர்வாகத்தினர் கூறினர். கோயில்களுக்கு லேசான சேதம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக வங்கதேச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, சின்மோய் கிருஷ்ண தாஸ் மற்றும் இஸ்கான் அமைப்பினர் உட்பட 17 பேரின் வங்கிக் கணக்குகளை 30 நாட்களுக்கு வங்கதேச நிர்வாகம் முடக்கி உள்ளது. இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்த நிலையில், அவர்களது வங்கிக் கணக்குகள் கடந்த 28ம் திகதி முடக்கப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் இந்துக்கள், இந்து கோயில்களை குறிவைத்து நடத்தப்படும் இத்தாக்குதல்களுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்துக்கள், கோயில்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்மோய் கிருஷ்ண தாஸை சந்திக்க, பூசாரி ஷியாம் தாஸ் பிரபு நேற்று சென்றுள்ளார். அப்போது, அரசு வாரன்ட் எதுவும் இல்லாமல் அவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இத்தகவலை இஸ்கான் துணை தலைவர் ராதாராம் தாஸ் நேற்று உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையே, தேச துரோக வழக்கில் சின்மோய் தாஸ் கைது செய்யப்பட்டிருப்பது வங்கதேச இந்துக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது.