அரசியல் கொந்தளிப்புக்கு மத்தியில் பங்களாதேசில் சோகம்: முன்னாள் பிரதமர் காலமானார்!
பங்களாதேசின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா Khaleda Zia தனது 80 ஆவது வயதில் இன்று (30) காலமானார்.
டாக்காவிலுள்ள வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்தார்.
கலீதா ஜியா, கல்லீரல் பாதிப்பு, நீரிழிவு மற்றும் இதயம் தொடர்பான பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு, நீண்டகாலமாக சிகிச்சைப்பெற்று வந்தார்.
பங்களாதேசின் முன்னாள் ஜனாதிபதி ஜியாவுர் ரஹ்மானின் மனைவியே கலீதா ஜியா. தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், 1981 ஆம் ஆண்டில் அரசியல் களம் புகுந்தார்.
பங்களாதேஸ் தேசியக் கட்சியின் தலைவராக 1984 ஆம் ஆண்டில் பதவியேற்றார்.
1991 முதல் 1996 வரையிலும், மீண்டும் 2001 முதல் 2006 வரையிலும் என மூன்று தடவைகள் இவர் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த அவரது மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் பங்களாதேஸ் திரும்பி இருந்தார்.
அந்நாட்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கவும் திட்டமிட்டுள்ளார்.
பொதுத்தேர்தலில் பங்களாதேஸ் தேசியக் கட்சி வெற்றி பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கலீதா ஜியாவின் மறைவு கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பங்களாதேசில் மக்கள் போராட்டம் வெடித்ததையடுத்து சேக் ஹசீனா பிரதமர் பதவியை துறந்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
அந்நாட்டில் தற்போது இடைக்கால அரசாங்கம் செயல்பட்டுவருகின்றது. பாரிய அரசியல் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





