இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடரிலும் வெற்றியை நோக்கி பங்களாதேஷ்
ராவல்பிண்டியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் தொடரிலும் வெற்றிபெறுவதற்கு பங்களாதேஷுக்கு மேலும் 143 தேவைப்படுகிறது.
முதலாவது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் 10 விக்கெட்களால் வெற்றியீட்டியிருந்தது,
இந்தப் போட்டியில் 185 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ஸக்கிர் ஹசன் 31 ஓட்டங்களுடனும் ஷத்மான் இஸ்லாம் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் பெற்ற 274 ஓட்டங்களே ஓர் அணியினால் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.
போட்டியின் ஆரம்ப நாள் ஆட்டம் கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ஆரம்பமானபோது பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்டது.
மெஹிதி ஹசன் மிராஸ் 61 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 57 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றி பாகிஸ்தானை சிரமத்தில் ஆழ்த்தினர்.
இருப்பினும் சய்ம் அயூப் (58), அணித் தலைவர் ஷான் மசூத் (57), சலமான் அகா (54) ஆகியோர் பெற்ற அரைச் சதங்களின் உதவியுடன் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 274 ஓட்டங்களைப் பெற்றது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் விக்கெட் இழப்பின்றி 10 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
மூன்றாம் நாள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 262 ஓட்டங்களைப் பெற்று 12 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்தது.
ஒரு கட்டத்தில் பங்களாதேஷ் 26 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.
ஆனால் லிட்டன் தாஸ் தனி ஒருவராக 138 ஓட்டங்களைக் குவித்து அணியைப் பலப்படுத்தினார்.
42ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் லிட்டன் தாஸ் குவித்த நான்காவது டெஸ்ட் சதம் இதுவாகும்.
முதல் டெஸ்டில் போன்றே இந்த டெஸ்டிலும் சகல துறைகளிலும் பிரகாசித்த மெஹிதி ஹசன் மிராஸ் 78 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரும் 7ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 165 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
குரம் ஷாஹ்ஸாத் 90 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸைத் தொடர்ந்த பாகிஸ்தான் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
மொஹம்மத் ரிஸ்வான் (43), சல்மான் அகா (47 ஆ.இ.) ஆகிய இருவரே 40 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
பந்துவீச்சில் ஹசன் மஹ்மூத் 43 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நஹித் ரானா 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.