அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து – ஒருவர் மரணம்
மோசமான வானிலையால் டிசம்பர் 28ஆம் திகதி அமெரிக்கா முழுவதும் 7,000க்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் 200க்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.‘ஃபிளைட்அவேர்’ இணையத்தளம் அவ்வாறு கூறியது.
நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் கடுமையான சுழல் காற்று வீசிய நிலையில், மேற்குக் கரையில் கடும் பனிப்பொழிவுடன் பலத்த காற்றும் வீசியது.
விடுமுறைப் பயணம் மேற்கொள்வோர் மிகவும் அவதிப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அட்லான்டாவின் ஹர்ட்ஸ்ஃபீல்டு-ஜேக்சன் அனைத்துலக விமான நிலையத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி விமானச் சேவைகள் தாமதமானதாக ‘ஃபிளைட்அவேர்’ குறிப்பிட்டது. டல்லாஸ்/ஃபோர்ட் வொர்த் அனைத்துலக விமான நிலையத்திலிருந்தும் ஹூஸ்டனின் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்திலிருந்தும் புறப்பட வேண்டிய விமானங்களில் ஏறக்குறைய 50 சதவீதம் தாமதமாயின.
தென்கிழக்கு மாநிலங்களான டெக்சஸ், லூசியானா, மிசிசிப்பி ஆகியவற்றில் 10 சுழல் காற்றுகள் வீசியதாகவும் ஹூஸ்டனில் இதனால் ஒருவர் உயிரிழந்ததாகவும் தேசிய வானிலை ஆய்வகமும் உள்ளூர்ச் சட்ட அமலாக்கப் பிரிவும் தெரிவித்தன.மேலும் நால்வர் காயமடைந்தனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பல வீடுகளும் பள்ளிகளும் கடுஞ்சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறினர். சமூக ஊடகங்களில் வெளியான படங்களில் மரங்கள் முறிந்து கிடப்பதையும் மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதையும் காண முடிகிறது.
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மணிக்கு 241 கிலோமீட்டர் முதல் மணிக்கு 80 கிலோமீட்டர் வரையிலான வேகம் கொண்ட காற்று வீசுகிறது. சான்ஃபிரான்சிஸ்கோவிலிருந்து போர்ட்லேண்ட், ஆரிகன் வரை கனமழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு தினத்திற்குள் 10 முதல் 15 செ.மீ. மழை பெய்யும் என்றும் டஹோ ஏரிப் பகுதியில் 90 செ.மீ. வரையிலான பனி பொழியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.