இலங்கையில் மோசமான வானிலை – இதுவரை ஆறு பேர் பலி
மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 06 ஆக அதிகரித்துள்ளது.
எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை படிப்படியாக தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக 104.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி நுவரெலியா – வட்டவளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
பலத்த மழையுடன் கூடிய பலத்த காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து உடமைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழையின் போது ஹன்வெல்ல வாக பிரதேசத்தில் வீதியில் மரம் ஒன்று வீழ்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகா பகுதியைச் சேர்ந்த உபுல் அனுருத்த லியனகே என்ற 47 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை புத்தளம் முந்தலம் சந்தி பகுதியில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு யுவதிகள் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அதே பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய சிறுமி படுகாயமடைந்து ஹலவத்த பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது பைன் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் சாரதி படுகாயமடைந்து திக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே வீதியில் ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹ ஹதெக்ம மற்றும் பத்தேகம இடையேயான நெடுஞ்சாலையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்ததால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.