டுவிட்டரில் அறிமுகமாகும் அசத்தலான வசதி
டுவிட்டரில் அசத்தலான வசதி ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக உரிமையாளரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரை கடந்த ஆண்டு உலக பணக்காரரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார்.
இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். மேலும் பயனாளர்களின் கோரிக்கையை ஏற்று டுவிட்டரில் பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் டுவிட்டரில் ராபின்சன் என்ற பயனாளர் ஸ்மார்ட் டிவிகளுக்கான டிவிட்டர் வீடியோ செயலி ஒன்று எங்களுக்கு தேவை என்றும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக டுவிட்டரில் எங்களால் வீடியோக்களை பார்க்க முடியவில்லை என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க் “அது வந்து கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து எலான் மஸ்க் பதிவிற்கு பதிலளித்த பயனாளர், இதை நான் பாராட்டுகிறேன். மேலும் யூடியூப்புக்கான சந்தாவை ரத்து செய்து விட்டு அதை திரும்பி கூட பார்க்காத நாள் வரும். அதை என்னால் பார்க்க முடியும் என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் எலான் மஸ்க்கின் பதிவிற்கு பின் யூடியூபில் காண்பதை போலவே பல்வேறு விதமான வீடியோக்களை டுவிட்டர் வீடியோ செயலி மூலம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சரிபார்க்கப்பட்ட டுவிட்டர் கணக்குகளை கொண்ட பயனாளர்கள் 8 ஜிபி அளவிலான 2 மணி நேரம் வரையிலான வீடியோக்களை பதிவிடும் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்காது.