யூதர்களுக்கு எதிரான வன்முறைத் தூண்டல்; ஆஸ்திரேலியாவில் பிரித்தானியர் கைது
ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்பட்ட நாசி (Nazi) சின்னங்களைக் காட்சிப்படுத்திய மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டிய குற்றச்சாட்டில், 43 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பகுதியில் வசித்து வந்த இவர், சமூக வலைதளங்கள் வாயிலாக நாசி கொள்கைகளைப் பரப்பியதுடன், யூத சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நாசி சின்னங்கள் பொறிக்கப்பட்ட வாள்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
“ஆஸ்திரேலியாவிற்கு விசா மூலம் வருபவர்கள் விருந்தினர்களே; இங்கு வெறுப்புணர்வை விதைப்பவர்களுக்கு இடமில்லை” என உள்துறை அமைச்சர் டோனி பர்க் (Tony Burke) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது குடிவரவுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், விரைவில் தனது தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்படவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வலதுசாரி தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சட்டங்களை இறுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





