அஸ்வின் சிஎஸ்கேவை விட்டு வெளியேறியிருக்கக்கூடாது! ஏபி டி வில்லியர்ஸ் கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில்,உலகளவில் உள்ள உரிமையாளர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக, அவர் ILT20 ஏலத்தில் பதிவு செய்துள்ளார், இதன் மூலம் ராபின் உத்தப்பா, யூசுஃப் பதான், மற்றும் அம்பதி ராயுடு ஆகியோருக்கு பிறகு இந்த லீகில் விளையாடும் நான்காவது இந்திய வீரராக ஆக வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையில், முன்னாள் தென் ஆப்பிரிக்க கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் முன்னணி வீரருமான ஏபி டி வில்லியர்ஸ், அஸ்வினை “கிரிக்கெட் விளையாட்டின் விஞ்ஞானி” என்று புகழ்ந்து பேசினார். அஸ்வின் கிரிக்கெட் விதிகளை அதன் எல்லைகள் வரை ஆய்வு செய்து, விளையாட்டை ஆழமாக புரிந்துகொண்டவர் என்று குறிப்பிட்டார்.
X தளத்தில் நடந்த 360 லைவ் நேரலையில், “அற்புதமான வாழ்க்கை. அவர் ஒரு அசாதாரண வீரர். கிரிக்கெட் விளையாட்டின் விஞ்ஞானி, டாக்டர், பேராசிரியர். விதிமுறைகளின் எல்லைகளை எப்போதும் சோதித்தவர். சில சமயங்களில் விமர்சிக்கப்பட்டாலும், பெரும்பாலும் அவர் சரியாகவே செயல்பட்டார். விளையாட்டை ஆழமாக ஆய்வு செய்யும் வீரர்களை நான் மிகவும் மதிக்கிறேன், அஸ்வின் அப்படிப்பட்டவர்களில் ஒருவர்,” என்று டி வில்லியர்ஸ் கூறினார்.
அஸ்வினின் திறமையைப் பாராட்டிய டி வில்லியர்ஸ், “நம்பமுடியாத திறன் கொண்டவர். இந்தியாவில் ஒரு மாபெரும் வீரரும், ஐகானும் ஆவார். இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காகவும் பல போட்டிகளில் வெற்றி தேடித் தந்தவர். அவர் மற்ற அணிகளில் விளையாடியபோது, அவருக்கு அங்கு பொருத்தமாக இருப்பது போல் தோன்றவில்லை. என் கருத்துப்படி, அவர் எப்போதும் CSK அணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அது அவரது முடிவு அல்ல, ஏனெனில் உரிமையாளர் தேர்வு, அணி தேர்வு போன்ற பல காரணிகள் இதில் உள்ளன. ஆனால், நான் அவரை எப்போதும் மஞ்சள் ஜெர்ஸி அணிந்த CSK வீரராகவே நினைவில் வைத்திருப்பேன்,” என்று கூறினார்.
அஸ்வினின் பேட்டிங் திறமையையும் டி வில்லியர்ஸ் பாராட்டினார். “அவரது பேட்டிங் திறமை பற்றி பேசப்படவே இல்லை. இந்திய அணி நெருக்கடியில் இருக்கும்போது, அவர் பேட்டைக் கையில் எடுத்து பலமுறை அணியை மீட்டவர். அவரது தைரியமும், பொறுப்புணர்வும் அவரை ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக மாற்றியது,” என்று குறிப்பிட்டு ஏபிடி பேசினார்.