இருளைப் பார்த்தால் பயப்படும் நபரா நீங்கள்? உங்களுக்கான தீர்வு
பயம் என்பது பல்வேறு வடிவங்களில் வெளிப்படும் இயற்கையான மனித உணர்வு. இதில் மிகவும் பொதுவான பயங்களில் ஒன்று இருளைப் பார்த்து பயப்படுவது. இதை ‘நிக்டோபோபியா (Nyctophobia)’ என அழைப்பார்கள். இது நமது பரிணாம வளர்ச்சியின் தொடக்க காலத்திலிருந்தே வேரூன்றிய ஒரு உள்ளுணர்வாகும். ஏனெனில் இருள் என்பது ஆபத்துக்களுடன் தொடர்புடையது. ஆனால் நவீன உலகில் செயற்கை ஒளி நமது சுற்றுப்புறங்களை ஒளிரச்செய்து பயம் சார்ந்த அனுபவங்களை முற்றிலுமாக மாற்றிவிட்டது.
இருள் பயத்தைப் புரிந்துகொள்ளுதல்:
பெரும்பாலும் இருள் பற்றிய பயம் என்பது நம்முடைய கற்பனையிலிருந்தே உருவாகிறது. இது மோசமான சூழ்நிலைகளையும், எதிர்பாராத அச்சுறுத்தல்களையும் உருவாக்குகிறது. எதற்காக பயப்படுகிறோம் என்பதே தெரியாமல் ஒருவர் பயப்படும்போது நமது புலன்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தும் தடைபடுகிறது. இதனால் நாம் பாதிக்கப்படுகிறோம் என்ற உணர்வு உண்டாக்கி, உதவியற்ற நிலையை ஏற்படுத்துகிறது.
இருள் பயம் ஏற்படுத்தும் பாதிப்பு:
இருளைப் பற்றிய பயம் நம் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இது தூக்க கலக்கம், பதற்றம் மற்றும் சில மோசமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும். சரியான வெளிச்சம் இல்லாத இடங்களுக்கு செல்வது அல்லது இரவில் தனியாக நடப்பது போன்ற எளிமையான செயல்களைக் கூட மிகவும் கடினமாக்கும். இதனால் ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சி தடுக்கப்படலாம்.
இருள் பயத்தை வெல்ல என்ன செய்யலாம்?
முதலில் நீங்கள் அதிகமாக பயப்படுவதை நினைத்து கவலைப்படாதீர்கள். பயம் என்பது ஒரு மனித இயல்பு என்பதை முதலில் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள். இருள் என்பது உண்மையில் ஆபத்தானது அல்ல, நமது கற்பனையினாலேயே இப்படி ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக இருளில் உங்களை வெளிப்படுத்துங்கள். முற்றிலுமாக இருள் மங்கிய இடத்திற்கு செல்வதை தவிர்ப்பதற்கு பதிலாக, தொடக்கத்தில் குறுகிய நேரம் அந்த நேரத்தை செலவிட முயலுங்கள். வெளிச்சத்தில் இருந்து இருளுக்கு போகும் போது கண்ணை மூடிக்கொண்டு சென்று இருளுக்கு மத்தியில் கண்ணைத் திறந்து உங்களை வசதியாக உணர வையுங்கள்.
உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சேர்ந்து இருளில் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிறரிடம் பேசிக்கொண்டே இருளில் செல்வது உங்களது பயத்தை குறைக்கும்.
பயத்தின் உண்மையான அறிவியல் மற்றும் உளவியலை பற்றி கூகுளில் தேடிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். பயம் சார்ந்த உண்மைகளைத் தெரிந்து கொண்டால், அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான தெளிவு உங்களுக்கு கிடைக்கும்.
பயத்தைக் குறைக்க, குறைந்த வெளிச்சத்தில் ஒளிரும் விளக்குகளை உங்களைச் சுற்றி ஒளிரச் செய்து, ஒரு பாதுகாப்பு உணர்வை முதலில் உருவாக்கி, பயத்தின் தன்மையை படிப்படியாகக் குறைக்கலாம்.
எனவே இந்த வழிமுறைகளைப் பின்பற்றி இருள் பயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட முயலுங்கள். ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள், உங்களின் உண்மையான வளர்ச்சி என்பது பெரும்பாலும் நீங்கள் இப்போது அதிகமாக பயப்படும் அந்த இருளுக்கு பின்னால் தான் இருக்கும். பயத்தின் மூலமாக நாம் எதையுமே சாதிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.
நன்றி – கல்கி