சபாநாயகருக்கும் – ஜனாதிபதிக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கிறதா? – லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனவின் செயற்பாடுகள் ஜனாதிபதிக்கு எதிராக இருப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உங்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஏதாவது முரண்பாடுகள் இருக்கிறதா என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் கேள்வி எழுப்பினார்.
பாராளுமன்றம் இன்று (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக சபாநாயகரின் அறிவிப்பு இடம்பெற்றது.
அதில் பாராளுமன்ற குழுக்களில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஆளும் கட்சி பிரதமகொறடா சபை முதல்வர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் ஆகியோருக்கு வழங்கப்பட்டிருக்கும் விரப்பிரசாதங்களுக்கு அமைய அதன் தலைவர்களிடம் கேட்டு அறிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது.
ஆனால் அவர்கள் அந்த குழுக்களுக்கு செல்வது யோக்கியம் இல்லை என தெரிவித்தார்.
இதன்போது லக்ஷ்மன கிரியெல்ல எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையிலேயே மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கும் உங்களுக்குமிடையில் மோதல் ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.
ஏனெனில் அரசாங்கத்தின் நடவடிக்கைக்ககளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும்போது அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கே எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்க நிதிக்குழுவுக்கு சென்றார்.
ஆனால் தற்போது அந்த நடவடிக்கையை நிறுத்தும் வகையில் நீங்கள் செயற்படுவதாக இருந்தால் நீங்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுபவராக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.