பொலிஸாரை அவமரியாதையாக பேசிய அர்ச்சுனா – நீதவான் பிறப்பித்த உத்தரவு!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதுடன், பொலிஸாரை தவறான வார்த்தையால் பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கினை விசாரணை செய்த கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே அர்ச்சுனாவிடம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.
கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக காரை நிறுத்தியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவை போக்குவரத்து பொலிஸார் விசாரித்துள்ளனர்.
இதன்போது, காரை குறித்த இடத்தில் ஏன் நிறுத்தினீர்கள் என பொலிஸார் வினவியதற்கு “காரை இங்கே நிறுத்தாமல், உங்கள் தலையிலா நிறுத்துவது” என அலட்சியமாக பேசியிருந்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானது.
நாடாளுமன்ற உறுப்பினர் மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தை மீறியதாக கூறி, கோட்டை பொலிஸார் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஒரு பி அறிக்கையை சமர்ப்பித்திருந்த நிலையில் நீதவான் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.