போல்டபிள் ஐபோன் வெளியிட தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 17 வரிசையை அடுத்த மாதம் வெளியிடத் தயாராகிவரும் நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மடிக்கக் கூடிய’ (foldable) ஐபோன் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போன் அடுத்தாண்டு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ப்ளூம்பெர்க் பத்திரிகையின் மார்க் குர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மடிக்கக்கூடிய ஐபோனுக்கு “V68” என்று குறியீட்டுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் ‘இசட் ஃபோல்டு’ (Z Fold) ரக போன்களைப் போலவே இதுவும் சிறிய டேப்லெட் போல விரியும் வடிவத்தில் இருக்கும்.
அதிர்ச்சியளிக்கும் வகையில், இந்த மடிக்கக்கூடிய ஐபோனில் சிம் கார்டு ஸ்லாட் இருக்காது எனவும், ஃபேஸ் ஐடி-க்கு (Face ID) பதிலாக டச் ஐடி (Touch ID) பயன்படுத்தப்படலாம் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது தற்போதைய ஐபோன்களுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்தப் புதிய ஐபோனில் 4 கேமராக்கள் இருக்கும்: ஒன்று முன் பக்கத்திலும், ஒன்று உட்புறத்திலும், 2 பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும், இந்தப் போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் மட்டுமே சோதிக்கப்பட்டு வருவதால், குறைந்த வண்ணத் தேர்வுகளே இருக்கலாம் எனத் தெரிகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் சப்ளையர்கள் புதிய மாடலுக்கான தயாரிப்புப் பணிகளைத் தொடங்கிவிட்டதாகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இந்த மடிக்கக்கூடிய ஐபோன், ஐபோன் 18 வரிசையுடன் சேர்ந்து “அடுத்த ஆண்டு இலையுதிர்காலத்தில்” (fall) வெளியிடப்படலாம்.
முந்தைய அறிக்கைகளின்படி, ஐபோன் 18 ஏர், ஐபோன் 18 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுடன் இந்த மடிக்கக்கூடிய ஐபோன் வெளியாகும் எனவும், வழக்கமான ஐபோன் 18 மாடலின் வெளியீடு 2027-க்கு ஒத்திவைக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தப் போனின் திரை, தற்போதுள்ள ஐபோன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்திற்கு நெருக்கமான புதிய ‘இன்-செல் டச்ஸ்கிரீன்’ (in-cell touchscreen) தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும். மடிக்கக்கூடிய திரைகளில் ஏற்படும் மடிப்பு சுருக்கத்தை (crease) குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த போனில் ஆப்பிளின் சொந்த C2 மோடம் பயன்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.