Site icon Tamil News

இலங்கை கிரிக்கெட் தொடர்பான வழக்கில் இருந்து மற்றுமொரு நீதிபதி விலகினார்

 

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டு குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் இருந்து மற்றுமொரு நீதிபதி இன்று விலகியுள்ளார்.

இந்த மனு இன்று நீதியரசர்களான டி. என். சமரகோன் மற்றும் நீல் இத்தவெல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்படி, மனு விசாரணைக்கு புதிய நீதிபதிகள் குழாம் ஒன்றை பெயரிடுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவுக்கு உரிய மனு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விசாரணையில் இருந்து இதுவரை 3 நீதிபதிகள் விலகியுள்ளனர்.

அதன்படி, கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க புதிய நீதிபதிகள் குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, நீதிபதிகளான சோபித ராஜகருணா மற்றும் டி.என்.சமரக்கோன் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் இது தொடர்பான மனு பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் தெரிவித்தார்.

இடைக்காலக் கட்டுப்பாட்டுக் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை வரை நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என விளையாட்டு அமைச்சர் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாக இடைக்காலக் குழுவின் பணிகளைத் தடுத்து விதிக்கப்பட்ட தடையை நீடிக்க வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபிதா ராஜகருணா முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால கிரிக்கெட் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு நேற்று விதிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு இன்றுடன் நிறைவடைவதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இடைக்கால உத்தரவை மேலும் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை பரிசீலிக்கப்படும் வரை இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதிமன்றில் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மனு மீதான பரிசீலனை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version