ஜெர்மனி மக்களுக்கு அடுத்த ஆண்டு முதல் காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி
ஜெர்மனியில் அடுத்த ஆண்டு முதல் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் அதிக கட்டணங்களை செலுத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொய்ச்லேண்ட் (Deutschland) டிக்கெட்டின் விலை மாதத்திற்கு 58 யூரோக்களிலிருந்து 63 யூரோக்களாக அதிகரிக்கவுள்ளது. மேலும் ஒற்றை, பல மற்றும் நேர அடிப்படையிலான டிக்கட்டுகளின் விலையும் பல மாநிலங்களில் உயரும்.
பெர்லின்-பிராண்டன்பர்க் போக்குவரத்து வலையமைப்பு, விலைகளை 6 வீதத்தால் உயர்த்த இருப்பதால் ஒரு S-Bahn டிக்கட், 3.80 யூரோவிலிருந்து 4 யூரோக்களாக அதிகரிக்கும்.
வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் டிக்கட்டுகள் சுமார் 5 சதவீதம் உயரும். அதே நேரத்தில் பிரெமன் மற்றும் லோயர் சாக்சனியில் விலைகள் சுமார் 4 சதவீதம் உயரும். சேவைகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரித்துள்ளமையே கட்டண அதிகரிப்புக்கு காரணம் என போக்குவரத்து சங்கங்கள் கூறுகின்றன.
ஊழியர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் ஆகியவை அவர்கள் சுட்டிக்காட்டும் காரணங்களாக உள்ளன. இதேவேளை, 2027ஆம் ஆண்டு முதல் டொய்ச்லேண்ட் டிக்கடின் (Deutschlandticket) விலை அரசாங்க பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக செலவு குறியீட்டால் கட்டுப்படுத்தப்படும்.





