இலங்கையில் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அங்குள்ள இலங்கையர்களைச் சந்தித்து உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதற்கமைய, எதிர்காலத்தில் சில வரி விகிதங்களைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஆண்டில் இராஜதந்திர உறவுகளில் சமநிலையை பேணுவதற்கு இலங்கையினால் முடிந்தது. நாட்டை முன்னோக்கி நகர்த்துவதற்கு, தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
இலங்கை வரலாற்றில் எந்த இன மோதல்களும் தலைதூக்காத ஆண்டாகக் கடந்த வருடம் வரலாற்றில் இணைந்துள்ளது.
இதனிடையே, அடுத்த ஆண்டு 3 ட்ரில்லியன் ரூபாய் கடனைப் பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அதற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கையில் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் எந்தவொரு இலங்கையரும் தனிப்பட்ட சலுகைகளை எதிர்பார்த்து தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவரவில்லை.
அவர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாகவும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.





