Tamil News

மட்டக்களப்பில் அமெரிக்க தூதுவரினால் திறந்துவைக்கப்பட்ட அமெரிக்கன் I Hub

அமெரிக்கன் iHub காரியாலயம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் அமெரிக்க தூதுவரினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது அதிதிகள் இனியம் இசைவாத்தியத்தோடு வரவேற்கப்பட்டு அமெரிக்கன் ஜ ஹப்(iHub) காரியாலயத்தின் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு பின்னர் ரிப்பன் வெட்டி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது.

 

இதனைத்தொடர்ந்து கணணி கூடம் மற்றும் லேசர் தொழில்நுட்பகூடம் என்பவற்றை பார்வையிட்டதுடன் அவற்றின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது.

இதனையடுத்து அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன் நிறைவில் அமெரிக்க தூதுவர் ஜுலி ஜங்க் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இருவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

மாணவர்கள்,உயர்தர கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கற்கையில் திறனை வளர்த்துக்கொள்ளல், ஆங்கில அறிவினை மேம்படுத்தல், விசேடமாக இளைஞர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதற்கான புலமை பரிசில்கள் வழங்குதல், தலைமைதாங்கும் குடும்ப பெண்களுக்கான தொழில் மற்றும் சந்தைப்படுத்தல் வழிகாட்டி போன்ற பல்வேறு அபிவிருத்திகளை மையப்படுத்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி செயலாளர், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உவவேந்தர், கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் முதல்வர், திணைக்கள அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர்,இந்த ஆண்டு எமது இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளின் 75 ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுகையில், இப்பிராந்தியத்திலுள்ள இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, புத்தாக்கம், தலைமைத்துவம், கல்வி மற்றும் ஒத்துழைப்பை பேணிவளர்த்தல் போன்ற விடயங்களில் ஒரு பெரும் நம்பிக்கையை இந்நிலையம் வழங்குகிறது. அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீடித்த மற்றும் உறுதியான பங்காண்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், அனைத்து மக்களும் சௌகரியமாகவும், உத்வேகமாகவும் உணரும் ஒரு இடமாக இது விளங்கும் என நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

Exit mobile version