டிரம்பின் 50% வரிக்கு மத்தியில் இந்தியப் பொருள்களின் இறக்குமதியை நிறுத்திய அமேசான், வால்மார்ட்

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்கா 50% வரிவிதித்துள்ளது.
இந்நிலையில், வால்மார்ட், அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், மறு அறிவிப்பு வரும்வரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சம்பந்தப்பட்ட இந்திய நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளன.
இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருள்களின் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் டிரம்ப் நிர்வாகம் விதித்துள்ள கூடுதல் வரியை இந்திய ஏற்றுமதியாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க நிறுவனங்களின் நிலைப்பாடாக உள்ளது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருள்கள் பேரளவில் தேங்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நிறுவனங்களின் இந்த முடிவால் இந்திய நிறுவனங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரிச்சுமை காரணமாக, பல இந்திய நிறுவனங்கள் தங்களுடைய பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பாத நிலை ஏற்படும் என்றும் இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களின் அளவு 40% முதல் 50% வரை குறையக்கூடும் என்றும் பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய சூழலில், அமேசான், வால்மார்ட் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், இந்தியப் பொருள்களை வாங்கும் முடிவை நிறுத்தி வைத்துள்ளன. இது விற்பனைச் சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
ஆடை ஏற்றுமதியைப் பொறுத்தவரை, இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்க இருந்தது.
முன்னணி இந்திய நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் 40% முதல் 70% வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன.இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில், ஏறக்குறைய அமெரிக்காவின் பங்களிப்பு மட்டும் 28% ஆகும்.