புற்றுநோயை 99.8 சதவீதம் சரியாக கண்டறியும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/ImageForNews_776210_17121385990774183-1296x700.webp)
தோல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே எளிதில் கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
இதன்மூலம், புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று தொழில்நுட்ப நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானதாக புற்றுநோய் திகழ்கிறது. உலகளாவிய அளவில் புற்றுநோயாளிகளில் 40 சதவீதம் அளவுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் முதல் 30 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தோல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே எளிதில் கண்டறியும் வகையில் செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கின் அனலிடிக்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ‘டெர்ம்’ என்ற பெயரிலான இந்த தொழில்நுட்பத்துக்கு பிரிட்டனின் மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின்படி, ஸ்மார்ட்போன்களில் மிகவும் எளிதான இந்த ‘டெர்ம்’ செயலியை பதிவேற்றம் செய்ய வேண்டும். ஸ்மார்ட்போனில் ‘டெர்மாஸ்கோப்’ என்ற படம்பிடிக்கும் கருவியை பொருத்த வேண்டும். இதன்மூலம், நோயாளியின் தோல் பகுதி படம்பிடிக்கப்படும். செயலியில் நோயின் ஒவ்வொரு தன்மையின்போதும், தோல் பகுதி எவ்வாறு இருக்கும் என்பது குறித்த புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும்.
நோயாளியின் தோல் பகுதியை படம்பிடித்தவுடன், அந்த புகைப்படத்தை, ஏற்கனவே உள்ள புகைப்படங்களுடன் செயலி பொருத்திப் பார்க்கும். இதன்மூலம், தோல் புற்றுநோய் உள்ளதா, அவ்வாறு புற்றுநோய் இருந்தால், அது எந்த கட்டத்தில் உள்ளது என்பதை செயலி வெளிப்படுத்தும்.
இந்த செயலி மூலம், தோல் புற்றுநோயை 99.8 சதவீதம் அளவுக்கு துல்லியமாக கணிக்க முடிவதாக ஸ்கின் அனலிடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நோயாளிகளை மிகவும் விரைவில் கணித்து புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று ஸ்கின் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான நீல் டேலி நம்பிக்கை தெரிவித்தார்.
புற்றுநோயைக் கண்டறிய சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற உலகின் முதலாவது செயற்கை புலனறிவு தொழில்நுட்பமாக ‘டெர்ம்’ அமைந்துள்ளது. பிரிட்டனில் உள்ள 21 சுகாதார மையங்களில் இந்தக் கருவி பயன்பாட்டில் உள்ளது. இதுவரை 1,35,000 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, 13,000-க்கும் மேற்பட்டோருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்கின் அனலிடிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.