பெண்களுக்கு ஆபத்தாக மாறும் – AI தொழில்நுட்பம்
தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு தற்போது மக்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் மெக்கின்சி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் அறிக்கையின்படி, 2030 வரை தொழிலாளர்களின் விருப்பங்கள் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதில் தங்களின் பணி சார்ந்து, ஆண்களை விட பெண்களே அதிகம் கவலைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக புதிய வேலைகளுக்கு மாறி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம் கொண்ட வேலைகளில் பெண்களை சேர்த்துக் கொள்வதாலேயே இத்தகைய ஏற்றத்தாழ்வு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பெண்களின் இந்த வேலையும் ஆட்டோமேஷன் காரணமாக விரைவில் பாதிக்கப்படும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வாடிக்கையாளர் சேவை, ரிசப்ஷினிஸ்ட் போன்ற வேலைகள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் பெண்களே அதிக அளவுக்கு வேலை வாய்ப்பை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.
உணவு மற்றும் உற்பத்தி தொழிலாளர்களுக்கான வேலை ஆட்டோமேஷன் காரணமாக குறைந்து வருவதாலும் வேலை இழப்பு அதிகம் ஏற்படும். வரும் 2030க்குள் குறைந்தபட்சம் 12 மில்லியன் அமெரிக்கர்கள் தங்களின் வேலையை மாற்றும் படியான சூழல் வரலாம் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய மாற்றத்தினால் பலர் வேலையில்லாமல் திண்டாடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
“வேலை வாய்ப்புகளை இழப்பவர்களில் பெரும்பாலானவர்கள் குறைந்த ஊதியம் பெறுபவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் தங்கள் வேலையில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், ஒயிட் காலர் வேலை என சொல்லப்படும் நிரந்தர வேலையில் இருப்பவர்களையும் இந்த செயற்கை நுண்ணறிவு விட்டுவைக்காது. ChatGPT போன்ற தொழில்நுட்பங்கள் பல வேலைகளை தன் கைவசம் முழுமையாக எடுத்துக்கொள்ளும்” என இந்த ஆய்வை நடத்திய மெக்கின்சி நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தார்.
மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பணியாளர்களைத் தயார்படுத்தும் சவாலை உலக நாடுகள் எதிர்கொண்டு வருகிறது. இந்த மாற்றத்தை உலக நாடுகள் எப்படி எதிர்கொண்டு வெற்றி காணும் என்பதில் மிகப்பெரிய சவால் உள்ளது என அந்த ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.