தவெகவுக்கு அடுத்த இடி:கரூர் தவெக கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயம் – 02 பிரிவுகளில் வழக்கு
தவெக கொள்கை விளக்க கூட்டத்தில் கொடிக் கம்பம் சாய்ந்ததில் நிர்வாகி காயமடைந்தார். இது தொடர்பாக தவெக நிர்வாகி மீது இரு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் 80 அடி வீதியில் தவெக கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்காக கரூர் மாநகராட்சியின் அனுமதியின்றி அப்பகுதியில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
பொதுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அப்பகுதியில் திடீரென மழை பெய்தது.
கட்சியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் இரவு உரையாற்றிக் கொண்டிருக்கும்போது மேடைக்கு அருகே நடப்பட்டிருந்த கொடிக் கம்பம் மின் வயரில் உரசியதில் கொடி தீப்பற்றியது.
உடனே அங்கிருந்தவர்கள் கொடிக் கம்பத்தை அகற்ற முயற்சித்தபோது, கொடிக் கம்பம் அப்படியே மேடை மீது சாய்ந்தது.
கட்சியின் பேச்சாளர் ஜெகதீசபாண்டியன் தலை மீது கம்பம் விழும்போது, அதனை அவர் கைகளால் தடுத்த நிலையில், அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மனோஜ்குமார் என்பவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய தவெக கரூர் மேற்கு நகர செயலாளர் சரவணன் மீது கரூர் மாநகராட்சியின் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தமை,ஜெனரேட்டர் வைத்தமை, கொடிக் கம்பம் வீழ்ந்து காயம் ஏற்படுத்தியதால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தமை, பிஎன்எஸ்எஸ் 289 பிரிவு தீப்பற்றக் கூடிய பொருட்களை பயன்படுத்தி கவனக்குறைவாக செயல்பட்டமை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் கரூர் நகர பொலிஸார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.





