சீன BYD வாகனங்கள் மீளப் பெற நடவடிக்கை – இலங்கையருக்குப் பாதிப்பில்லை
உலகளாவிய ரீதியில் வாகனங்களை மீளப் பெறும் நடவடிக்கையை சீன மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD மேற்கொண்டுள்ளது.
எனினும் தமது நிறுவனத்தால் அண்மையில் அறிவிக்கப்பட்ட உலகளாவிய ரீதியிலான வாகனங்களை மீளப் பெறும் நடவடிக்கை இலங்கைக்குப் பொருந்தாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் தயாரிப்புத் தரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக, சுமார் 115,000 BYD டாங் (Tang) மற்றும் யுவான் புரோ (Yuan Pro) வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தது.
எனினும், இந்த மீளப் பெறும் நடவடிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி வரை உற்பத்தி செய்யப்பட்ட BYD Tang மற்றும் 2021 ஆம் ஆண்டு முதல் பெப்ரவரி 6 முதல் 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 வரை உற்பத்தி செய்யப்பட்ட Yuan Pro வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த குறிப்பிட்ட ரகங்கள் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவில்லை அல்லது விற்பனை செய்யப்படவில்லை என்று BYD நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது
எனவே, தற்போது நாட்டில் பயன்பாட்டில் உள்ள எந்தவொரு BYD ரக வாகனமும் இந்த மீளப் பெறும் நடவடிக்கையால் பாதிக்கப்படாது என்று உள்ளூர் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இலங்கையில் உள்ள அனைத்து BYD வாகனங்களுக்கும் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (Pvt) Ltd மூலம் விநியோகம், சேவை மற்றும் முழுமையான உற்பத்தியாளர் உத்தரவாதம் வழங்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.





