வியட்நாமில் ஓடும் ரயிலுக்கு எதிராக நின்று போஸ் கொடுத்த பெண்; காப்பாற்றியவருக்கு அபராதம்
ரயில் கடத்தில் நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க சுற்றுலாப் பயணியை அனுமதித்த குற்றத்திற்காக வியட்னாமில் உணவக உரிமையாளர் ஒருவருக்கு 7.5 மில்லியன் வியட்னாம் டாங்ஸ் (S$398) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
தலைநகர் ஹனோயின் புகழ்பெற்ற ரயில் வீதியில் அந்த உணவகம் அமைந்துள்ளது.
ரயில் வந்துகொண்டு இருந்தபோது ஆபத்தை உணராமல் அதற்கு எதிராக நின்று வெளிநாட்டுப் பெண் ஒருவர் போஸ் கொடுக்கும் காணொளி செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஃபேஸ்புக்கில் வேகமாகப் பரவியது.
போஸ் கொடுப்பதில் மூழ்கி இருந்த பெண்ணை ரயிலில் சிக்கிவிடாமல் நபர் ஒருவர் ஓடிவந்து தள்ளிவிடுவதும் அந்தக் காணொளியில் பதிவானது.
அச்சம்பவத்தை அதிகாரிகள் விசாரித்தபோது, பெண்ணை பாதுகாப்புக்காகத் தள்ளிவிட்ட நபர் உணவக உரிமையாளர் என்பது தெரியவந்தது.
ஹோவான் கியெம் வட்டார காவல்துறையினர் அந்த 61 வயது நபருக்கு அபராதம் விதித்தனர்.உணவகத்துக்கு உரிமம் வைத்திராதது, பாதுகாப்பு ஆபத்து விளைவிக்கும் நடத்தைக்கு தனது வாடிக்கையாளர்களை அனுமதித்தது ஆகிய குற்றங்களுக்காக அந்த அபராதம் விதிக்கப்பட்டது.