இந்தியாவில் 7 பிள்ளைகளின் தந்தையின் வாழ்க்கையை ஒரே நாளில் மாற்றிய வைரக்கல்
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் கடும் கடன் சுமையில் வாழ்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான ராஜு என்ற தொழிலாளரின் வாழ்க்கை அவரே எதிர்பாராத வகையில் மாறியுள்ளது.
வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் வறுமையில் வாடி வதங்கிய ராஜு கோன்ட், டிராக்டர் ஓட்டுநராகப் பணி புரிந்துகொண்டிருந்தார். அதுமட்டுமல்லாது, வயல்களிலும் வைர சுரங்கங்களிலும் வேலை செய்தார்.
நாள் ஒன்றுக்கு 3 பவுண்ட் சம்பளம் அவரது பெரிய குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
அரசாங்கத்துக்குச் சொந்தமான 64 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தில் ரத்தினக் கற்ளைத் தேடும் பணியில் 40 வயது ராஜுவும் அவரது தம்பி ராக்கேஷும் அவ்வப்போது ஈடுபட்டனர். இதற்காக அவர்கள் நாளுக்கு 8 பவுண்ட் செலுத்தினர்.
இந்நிலையில், அதிர்ஷ்ட தேவதை ராஜுவுக்குக் கருணை காட்டியது. ஜூலை 24ஆம் திகதியன்று நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தபோது 19.22 கேரட் வைரம் அவருக்குக் கிடைத்தது. அந்த வைரத்தின் விலை கிட்டத்தட்ட 139,000 பவுண்டாகும்.
“அந்தக் கல் என் கையில் பட்டதும் அதைத் தோண்டி வெளியே எடுத்தேன். அதன் மீது இருந்த அழுக்கு, மண் ஆகியவற்றை என் கைகளால் துடைத்து சுத்தப்படுத்தினேன். துடைக்கத் துடைக்க அது பளபளவென மின்னியது. அது வைரம் என்று எனக்குப் புலனானது,” என ராஜு தெரிவித்தார்.
கையில் கிட்டியது வைரம்தான் என்று தெரியவந்ததும் அவரும் அவரது தம்பியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டாடினர்.
வைரத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொண்டனர். அதன் பிறகு, தங்கள் தாயாரை அழைத்துக்கொண்டு பன்னா மாவட்ட வைர அலுவலகத்துக்குச் சென்று வைரத்தின் மதிப்பை உறுதி செய்தனர்.
“இதையடுத்து, நாங்கள் அரசாங்கப் படிவம் ஒன்றைப் பூர்த்தி செய்ய வேண்டும். அடையாள ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிப்பதுடன் அரசாங்கத்துக்கு 800 ரூபாய் செலுத்த வேண்டும். அந்த இடத்தில் வைரக் கற்களைத் தேடும் பணிகள் முடிந்த பிறகு வேறொரு நிலத்தில் தேட மீண்டும் விண்ணப்பிக்கலாம்,” என ராஜு தெரிவித்துள்ளார்.
“ரத்தினக் கற்களைத் தேட, அரசாங்கத்துக்குச் சொந்தமான சில நிலங்கள், குடும்பங்களுக்கு குத்தகை விடப்படுகின்றன. உள்ளூர் அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் குடும்பங்கள் ரத்தினக் கற்களைத் தேடுகின்றனர். அவ்வாறு கிடைக்கும் ரத்தினக் கற்களை விற்று கிடைக்கும் பணத்தில் 11.5 சதவீத தொகையுடன் சிறிதளவு வரியையும் அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. எஞ்சிய தொகை ரத்தினக் கற்களைத் தேடிக் கண்டுபிடித்தோருக்குக் கொடுக்கப்படுகிறது.
“எங்கள் வாழ்க்கை நினைத்துப் பார்க்க முடியாத வகையில் முற்றிலும் மாறிவிட்டது. பணம் கைக்கு வந்ததும் முதலில் கடனை அடைத்துவிடுவேன்ஃ பணத்தைப் பயன்படுத்தி எங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்போம். வீடுகள் கட்ட திட்டமிட்டுள்ளோம். நிலங்கள் வாங்குவோம். டிராக்டர் வாங்குவது பற்றியும் யோசித்து வருகிறோம்,” என ராஜு தெரிவித்துள்ளார்.
ராஜுவின் வீட்டில் அவரது பெற்றோர், மனைவி, ஏழு பிள்ளைகளுடன் அவரது தம்பி மற்றும் சகோதரியின் குடும்பத்தினரும் உள்ளனர்.