இலங்கை நாடாளுமன்ற கூட்டம் தொடர்பில் சபாநாயகர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!
இலங்கை நாடாளுமன்றக் குழுக் கூட்டங்கள் குறித்து சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (20.11) விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இதன்போது பேசிய சபாநாயகர், நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது வேறு வெளியாட்கள் யாரும் கூட்ட அறைக்குள் நுழைய முடியாது என்று குறிப்பிட்டார்.
குழுத் தலைவர்கள் குழுவில் பணிபுரியும் வரம்பிற்கு அப்பால் செல்வது தொடர்பில் தமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தின் மரபுகளை நீண்டகாலமாகப் பேணிக் காக்கும் வகையில் செயற்படுவதற்கு அனைத்துக் குழுத் தலைவர்களும் நிலையியற் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
குழுவின் தலைவர்கள் பாராளுமன்ற அதிகாரிகளை தவிர வேறு யாரையாவது குழுவின் பணிக்காக அழைத்து வந்தால் அதற்கான முன் எழுத்துமூல அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
மேலும், குழுக்களின் பணியின் போது, பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள், சட்டப்பூர்வ அல்லது சட்டபூர்வமற்ற நிறுவனங்களின் அரசாங்க அதிகாரிகளை அழைத்து, சம்பந்தப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட விடயங்கள் குறித்து மாத்திரம் வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடுவதில் அவர்கள் அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ கடிதங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது எனவும் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.