ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு
ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஜப்பானின் டோடா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரண்டு சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்த வந்துள்ளதுடன் அவர்கள் 50 மற்றும் 70 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து சந்தேகநபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களைக் கண்டுபிடிக்கும் பாரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு வயதான நோயாளி காயமடைந்தனர்.
இதற்கிடையில், ஜப்பானின் ‘வாரபி’ பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையத்தில் இரண்டு பேர் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.
மருத்துவமனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் தபால் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், ஜப்பானிய பொலிஸாரை மேற்கோள் காட்டி, மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரால் இரண்டு பேர் தபால் நிலையத்தில் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தபால் நிலையத்திற்கு முன்னால் நபர் ஒருவர் துப்பாக்கியை வைத்திருப்பதைக் காட்டும் காணொளிகளையும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பணயக் கைதிகள் இருவரும் 20 வயது மற்றும் 30 வயதுடைய பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் வன்முறை அரிதான நாடாக கருதப்படுகிறது.
ஆனால் சமீபகாலமாக, ஜப்பானில் இருந்து துப்பாக்கிச் சூடு தொடர்பான சம்பவங்களைப் புகாரளிக்கும் போக்கு அதிகரித்துள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.