டி சொய்சா மகளிர் வைத்தியசாலையில் அரிய பிரசவம்
கொழும்பு சொய்சா மகளிர் வைத்தியசாலையில் விசேட குழந்தையொன்று பிறந்துள்ளது.
குழந்தையின் நஞ்சுக்கொடியானது கருப்பையில் இருந்து வெளிவந்து தாயின் குடலுடன் இணைந்ததாகவும், அதன் மூலம் உடலுக்குத் தேவையான இரத்தத்தைப் பெறுவதாகவும், சுமார் 30,000 பிரசவங்களில் அரிதாக இவ்வாறு நடக்கும் எனவும் வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
சொய்சா மகளிர் வைத்தியசாலையில் விசேட அறுவை சிகிச்சை மூலம் இன்று குழந்தை பிறந்துள்ளது.
சத்திரசிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களும் வருகை தந்திருந்ததாக சொய்சா மகளிர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க தெரிவித்தார்.
குழந்தையின் தாய் 6 வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை கிண்ணியா வைத்தியசாலையில் இருந்து 28 வார கர்ப்பத்தை முடித்து சொய்சா மகளிர் வைத்தியசாலைக்கு வந்திருந்தார்.
அப்போதிருந்து, கர்ப்பிணித் தாய் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு 34 வார கர்ப்பம் வரை மருத்துவ மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்த அறுவை சத்திரசிகிச்சையின் போது அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம் இருந்த போதிலும் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.