இந்தியாவில் தீபாவளி கொண்டாடியபோது மகன் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை
தங்கள் வீட்டிற்கு வெளியே தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தபோது நபர் ஒருவரும் அவருடைய உறவினரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் இந்தியாவின் டெல்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 31) நிகழ்ந்தது.
கூலிப்படையை ஏவிவிட்டு, அவர்களைக் கொன்ற 16 வயது இளையர் கைதுசெய்யப்பட்டு விட்டதாகக் காவல்துறை தெரிவித்தது. பண விவகாரமே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது.
டெல்லியின் ஷாதாரா பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் சர்மா, 44, தம் உறவினர் ரிஷப் சர்மா, 16, மகன் கிரிஷ் சர்மா, 10, இருவருடன் வீட்டிற்கு வெளியே மத்தாப்புக் கொளுத்தி, தீபாவளி கொண்டாடினர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் இருவர் அங்கு வந்தனர். ஒருவர் மட்டும் அதிலிருந்து இறங்கி ஆகாஷை நோக்கி ஐந்து முறை சுட்டார்.
பின்னர், வெளியில் இன்னொருவர் தயாராக மோட்டார்சைக்கிளில் காத்திருக்க, அதன்மூலம் அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். அவர்களை விரட்டிச் சென்ற கிரிஷைக் காயப்படுத்திய அவர்கள், ரிஷப்பையும் சுட்டுக்கொன்றனர்.
இந்நிலையில், தம்மிடம் வாங்கிய பணத்தைத் ஆகாஷ் திருப்பித் தராததால் அந்த 16 வயது இளையர் கூலிப்படையினரைக் கொண்டு, அவரைக் கொன்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
“17 நாள்களுக்கு முன்பே ஆகாஷைக் கொல்ல அந்த இளையர் திட்டமிட்டுவிட்டார். கைதுசெய்யப்பட்டுள்ள இளையர், ஆகாஷ், அவருடைய குடும்பத்தினர் ஆகியோர்மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன,” என்று காவல்துறை விளக்கியது.