நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தினால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி தாய்லாந்துக்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது, குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட வர்த்தகர் கொழும்பு பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 64 வயதுடையவர் என்பதுடன் தாய்லாந்தின் பாங்கொக் செல்லும் தாய் எயார்லைன்ஸ் TG-308 விமானத்தில் ஏறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கு கடமையாற்றிய குடிவரவு அதிகாரி அவரின் கடவுச்சீட்டு மற்றும் அது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்து சந்தேகத்தின் அடிப்படையில் பிரதான குடிவரவு அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தொழில்நுட்ப சோதனையில் போலி கடவுச்சீட்டு என்றும் அதில் எழுதப்பட்ட குடியேற்ற முத்திரைகள் போலியானது என்றும் குடிவரவு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
முன்னதாக, குறித்த வர்த்தகர் போலி ஆவணங்களை தயாரித்து இலங்கையர் ஒருவரை இத்தாலிக்கு அனுப்பும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து, கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவர் மீது நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் வழக்கில், அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி நாட்டை விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது குறித்த வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.