பூமியைவிட 3 மடங்கு நீர் கொண்ட கோள் – ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
பூமியைவிட அளவில் அதிகமான நீர் கொண்ட புதிய கிரகத்துக்கான வாய்ப்பை வானியல் அறிஞர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த வானியல் ஆச்சரியம், ஆதியில் பூமி உள்ளிட்ட கோள்கள் எப்படி உருவாகி இருக்கும் என்ற கேள்விக்கு பதில் தரவும் தயாராக இருக்கிறது.
பிரபஞ்சத்தில் பூமி வாழ் மனிதர்கள் மேற்கொள்ளும் வானியல் ஆராய்ச்சிகள் ஏராளம். அவற்றில் இந்த பூமியைப் போன்றே உயிர்கள் வாழ வாய்ப்புள்ள, இன்னொரு கிரகத்தை அடையாளம் காண்பதும் அடங்கும். கூடவே, இந்த பிரபஞ்சமும் அதன் நட்சத்திரங்கள் மற்றும் கோள்களும் எவ்வாறு ஜனித்தன என்ற தேடலும் உண்டு. இந்த ஐயங்கள் அனைத்துக்கும் அண்மை ஆய்வு ஒன்று பதில் தர முன்வந்திருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் 450 ஒளியாண்டுகள் தொலைவில், பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்திருக்கும் இளம் நட்சத்திரம் ஒன்றும், அதனைச் சுற்றி கிரகங்கள் உருவாவதற்கான வாய்ப்பையும், இத்தாலியின் மிலன் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி தலைமையிலான ஆய்வுக்குழுவினர் கண்டறிந்துள்ளனர். சுமார் 1 லட்சம் ஆண்டுகள் வயதே இருக்கும் இளம் நட்சத்திரத்துக்கு ஹெச்.எல்.டவுரி என பெயரிட்டுள்ளனர்.
இந்த நட்சத்திரத்தை சுற்றி கிரகத்தின் தோற்றத்துக்கு அடிப்படையான வட்டுகளும், அதில் நீருக்கான நீராவியும் கண்டறியப்பட்டுள்ளன. இளம் நட்சத்திரம், அதைச் சுற்றிய கோள்களின் உருவாக்கத்துக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை விட, வட்டுகளில் பொதிந்துள்ள நீர் அளவு ஆய்வாளர்களை வாய் பிளக்கச் செய்திருக்கிறது. பூமியின் பெருங்கடல்களில் நிறைந்திருக்கும் நீரைவிட, அவை 3.7 மடங்கு அதிகம்.
வட்டுகளின் நீராவியும் அதனைச் சூழ்ந்துள்ள தூசுக்களின், புதிய கோள் ஒன்றின் உருவாக்கத்தை சுட்டிக்காட்டுகின்றன. இது இந்த பிரபஞ்சத்தில் பூமி உள்ளிட்ட கோள்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்ற கடந்த காலத்துக்கான சாளரமாக அமைந்திருக்கிறது. இளம் நட்சத்திரமான ஹெச்.எல்.டவுரி மற்றும் அதனைச் சுற்றிய வட்டுக்கள் குறித்தான ஆய்வின் ஊடே பூமியின் ஆதி தோற்றம் குறித்தும் அறிந்துகொள்ள தற்போது வாய்ப்பாகி இருக்கிறது.
“ஒரு கிரகம் உருவாகும் அதே பகுதியில் உள்ள நீராவி கடல்களின் தோற்றத்தை அடையாளம் காண முடியும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை” என்று வானியலாளர் ஸ்டெபானோ ஃபச்சினி ஆச்சரியம் காட்டுகிறார். இவர் தலைமையிலான ஆய்வு அனைத்தும் ‘நேச்சர் அஸ்ட்ரானமி’ இதழில் தற்போது வெளியாகி இருக்கிறது.
நமது சூரியக் குடும்பத்தில் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வை, பிரபஞ்சத்தின் இன்னொரு மூலையில் இளம் நட்சத்திரமும் அதனைச் சுற்றிய கோள்களின் உருவாக்கமும் நகலெடுத்தவாறு தோற்றம் தந்திருப்பது, வானியல் ஆய்வாளர்களை புதிய உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Thank you – Hindutamil