உதவி கேட்டு கத்திய 6வயது சிறுமி… பூங்காவில் பிரித்தானிய இளைஞர் செய்த கொடுஞ்செயல்!

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் 6 வயது சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றிலேயே வழக்கு தொடர்பான சம்பவம் நடந்துள்ளது. இதில் கைதான 24 வயது லூயிஸ் ஜோன்ஸ் அடுத்த 12 ஆண்டுகளுக்கு பிணையில் வெளிவர முடியாது எனவும், ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் அமர்ந்து, அங்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த சிறுமிகளின் புகைப்படங்களை லூயிஸ் ஜோன்ஸ் பதிவு செய்துள்ளார்.இந்த நிலையில், சிறுமி ஒருவரை தனியாக அணுகி, உதவ முன்வருவது போல நடித்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் வாயை மூடி, அங்கிருந்து கடத்திச் சென்றுள்ளார். ஆனால், குறித்த சம்பவத்தை 11 வயது சிறுமி ஒருவர் கவனிக்க, எஞ்சிய சிறுமிகளிடன் கூறி உதவி கேட்க விரைந்துள்ளனர்.
அந்த சிறுமி தமது தாயாரிடம் இச்சம்பவத்தை வெளிப்படுத்த, அங்கிருந்த பெற்றோர்கள் துரிதமாக செயல்பட்டு, அப்பகுதி முழுவதும் தேடியுள்ளனர். இதே வேளை லூயிஸ் ஜோன்ஸ் தாம் கடத்திய 6 வயது சிறுமியை துன்புறுத்தி மயக்கமடைய செய்துள்ளார்.மட்டுமின்றி, இனி சத்தமிட்டால், வீட்டுக்கு திரும்ப முடியாது என சிறுமியை மிரட்டியுள்ளார். பின்னர் காட்டுப்பகுதிக்கு சிறுமியை கொண்டுசென்று சீரழித்துள்ளதுடன், முகம் சுழிக்கும் வகையிலான புகைப்படங்களும் பதிவு செய்துள்ளார்.
சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் அந்த சிறுமி குடியிருப்பு ஒன்றில் சென்று உதவி கேட்டதுடன், தாம் கடத்தப்பட்டதாகவும் அழுதுள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் சிராய்ப்புகளும் ரத்தக்கறையும் காணப்பட்டுள்ளது.இதனிடையே, சிறுமியை சீரழித்துவிட்டு மாயமாக முயன்ற லூயிஸ் ஜோன்ஸ் அடுத்த நாள் வேறு வழியின்றி பொலிசாரிடம் சிக்கியுள்ளார். விசாரணையின் தொடக்கத்தில் குற்றத்தை மொத்தமாக மறுத்த லூயிஸ் ஜோன்ஸ், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
லூயிஸ் ஜோன்ஸ் ஏற்கனவே 12 வயது சிறுமி ஒருவரை தமது ஆசைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் கைதானதும் நீதிமன்ற விசாரணையில் அம்பலமானது. மேலும், அந்த வழக்கின் விசாரணையில் இருந்த வேளையில் தான், 6 வயது சிறுமியை கடத்தி சீரழித்துள்ளார்.தற்போது குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு வெளியே வரமுடியாதபடி, ஆயுள் தண்டனை விதித்து மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.