பொது வெளியில் இருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய தலிபான்கள்!!
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினர். அதன் பிறகு அங்கு பெண்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்புகள் உள்பட பல்வேறு விவகாரங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் குற்றம் சுமத்தப்பட்ட சிலருக்கு பொது இடத்தில் தலிபான்கள் மரண தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் இன்று 2 பேருக்கு தலிபான்கள் பொது இடத்தில் மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். கஜினி நகரத்தில் உள்ள அலி லாலா பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் துப்பாக்கிச்சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் கொல்லப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் எதையும் தலிபான்கள் வெளியிடவில்லை. தலிபான்களின் தலைவர் ஹிபாத்துல்லா அகுன்சாடா பிறப்பித்த உத்தரவின்பேரில் இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட அங்குள்ள உள்ளூர் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.