OpenAI SORA-வை பயன்படுத்தும் முறை தொடர்பில் அறிவிப்பு
செயற்கை நுண்ணறிவுத் துறையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த OpenAI நிறுவனம், சமீபத்தில் அதன் அடுத்த ஏஐ மாடலான Sora-வை அறிமுகப்படுத்தி இவ்வுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
SORA AI என்ன செய்யுமென்றால், நீங்கள் கொடுக்கும் வாக்கியங்களை கண நேரத்தில் ஒரு நிமிட வீடியோவாக உருவாக்கிவிடும். இப்படி செய்வதற்கு ஏற்கனவே பல கருவிகள் இருக்கும்போது, SORA பற்றிய பேச்சு மட்டும் ஏன் அதிகமாக இருக்கிறது? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
இதற்குக் காரணம் சோரா மற்ற கருவிகளுடன் ஒப்பிடுகையில், நாம் கொடுக்கும் வாக்கியங்களில் இருந்து மிகத் துல்லியமாக நம்மை அசரவைக்கும் அளவுக்கு ஒரு நிமிட வீடியோவை உருவாக்குகிறது. இதுகுறித்து பேசிய OpenAI நிறுவனர் சாம் அல்ட்மேன், “இந்த காலத்துடன் தொடர்புடைய மக்களின் பிரச்சினைகளை எளிதில் சரி செய்யும் வகையில், பயிற்சி கொடுக்கப்பட்ட மாதிரிகளை உருவாக்கும் குறிக்கோளுடன், சோரா உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பத்தால் எளிதான முறையில் எதார்த்தமாக வீடியோக்களை உருவாக்க முடியும்.
நாம் கொடுக்கும் கற்பனையான உரைகளை ஒரு நிமிட வீடியோவாக இதனால் உருவாக்க முடியும். இது தவிர ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ள வீடியோவை இதில் செலுத்தி வேறு மாதிரியாகவும் மாற்றலாம். இதில் உருவாக்கப்படும் வீடியோக்கள் உயர்தரத்தில் துல்லியமாக இருக்கும். பல கதாபாத்திரங்களை ஒரே காணொளியில் சோராவில் எவ்வித சிக்கலுமின்றி உருவாக்கலாம்.
OpenAI SORA பயன்படுத்துவது எப்படி?
இப்போது எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் சோரா உருவாக்கப்படவில்லை. குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டுமே அணுக முடியும். தவறான தகவல்கள் மற்றும் மோசமான காணொளிகளை உருவாக்கும் அபாயத்தை தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததும் டிசைனர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இதன் அணுகலைக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயனர்களின் அனுபவங்களை சேகரித்து, கூடுதல் மேம்படுத்தல்களை செய்ய உள்ளதாகவும், இவை அனைத்தும் வெற்றிகரமாக நடந்ததும் பயனர்களுக்கு வெளியிடும் எண்ணம் உள்ளதாகவும் OpenAI நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்ற தகவலை சேகரிக்கும் ஆய்வில் OpenAI தற்போது ஈடுபட்டுள்ளது. குறிப்பாக பாலியல் சார்ந்த உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு இது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
மோசமான வீடியோக்களை அப்லோட் செய்தால் அதை Sora ஏற்காது என சொல்லப்படுகிறது. மேலும் பாதுகாப்பு அம்சங்களில் இதை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதுபோன்ற சவால்கள் அனைத்தையும் இது கடந்தால் மட்டுமே, எல்லா மக்களுக்கும் பயன்பாட்டுக்கு வரும். அதுவரையில் நாம் கொஞ்சம் பொறுமை காக்கத்தான் வேண்டும்.