பிரதமர் சுனக் கடந்த ஆண்டு செலுத்திய வரி : வெடித்த சர்ச்சை
பிரித்தானிய பிரதம மந்திரி ரிஷி சுனக் கடந்த நிதியாண்டில் 508,000 பவுண்டுகள் வரியாகச் செலுத்தியதாக தகவல் வெளியாகியுளளது.
2022 இல் பிரதம மந்திரியாக பதவியேற்ற பிறகு சுனக் தனது வரி விவகாரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவது இது இரண்டாவது முறையாகும்
நிதியமைச்சர் மற்றும் பிரதம மந்திரி ஆகிய பதவிகளில் இருந்து சுனக் 139,000 பவுண்டுகள் மற்றும் முதலீடுகள் மூலம் 2.1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
தனது கடந்தகால நிதிச் சேவைகள் மற்றும் அவரது மனைவியின் குடும்ப சொத்து ஆகியவற்றின் மூலம் பிரித்தானிய வரலாற்றில் பணக்கார பிரதமராக அறியப்படுகிறார்.
இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரிஷி சுனக் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கான வரியாக 22.8 சதவிகிதம் செலுத்தியுள்ளார். பிரித்தானியாவில் சராசரியாக 41,604 பவுண்டுகள் சம்பளம் பெறும் ஆசிரியர் ஒருவர் செலுத்தும் வரி விகிதத்தையே பல மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ரிஷி சுனக்கும் செலுத்துகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
மேலும், 37,000 சம்பளம் வாங்கும் செவிலியர் ஒருவரும் பிரித்தானியாவில் 21 சதவிகித வரி செலுத்துகிறார். இந்த நிலையில், கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டினாலும், பிரதமர் இவ்வளவு குறைந்த வரி செலுத்தியிருக்கிறார் என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்றே நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.