இலங்கை வந்தவுடன் முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ள பசில் ராஜபக்ஷ!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானம் எடுக்கப்படும் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதியளவில் பஷில் ராஜபக்ஷ நாடு திரும்புவதாகவும் குறிப்பிட்டது.
உத்தேச ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதா? இல்லையா? என்ற தீர்மானமும் இதன் போடு எடுக்கப்படவுள்ளத.
மேலும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கலந்துகொண்டிருந்த அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேசுவதாயின் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோருடன் முதலில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற விடயத்தை வலியுறுத்தினார்.
இதன் பின்னரே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் முன்னெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் உள்ள பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் 18ஆம் திகதி நாடு திரும்புகிறார். இவரது வருகையின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உயர் மட்டத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடுவார்.
இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது வேட்பாளர் விடயம் குறித்து பேசப்படவுள்ளது. மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய அரசியல் கூட்டணிக்காக ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.