ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம் … நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு விமானங்கள்!
ஜப்பானின் இடாமி விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், விமான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் கடந்த சில நாட்களாகவே விமான விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. ஹனேடா விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த ராணுவ விமானத்தின் மீது, தரையிறங்கிக்கொண்டிருந்த பயணிகள் விமானம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோதியதில், இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய நிலையில், ராணுவ விமானத்தில் பயணித்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவமாக, ஹொக்கைடோ விமான நிலையத்தில் கடும் பனிப்பொழிவால் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக உரசி விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 10 மணியளவில் உள்நாட்டிலேயே இயக்கப்படும் ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் ஒன்று, பறப்பதற்கு தயாராகவும், மற்றொன்று தரையிறங்கி பார்க்கிங் பகுதிக்கும் சென்று கொண்டிருந்தது. இரண்டு விமானங்களும் பார்க்கிங் வாயில் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களின் இறக்கைப் பகுதிகளும் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேராக மோதிகொண்டன. பொதுவாகவே இறக்கைப் பகுதியில் தான் விமானத்திற்கு தேவையான கூடுதல் எரிபொருள் சேமிக்கப்பட்டு இருக்கும். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எரிபொருள் டாங்குகளில் சேதம் ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் இரண்டு விமானங்களிலும் பயணித்த பயணிகளில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இடாமி ஒசாகா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக இந்த விமான நிலையத்திலிருந்து கிளம்ப இருந்த 10க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் தொடரும் இது போன்ற விமான விபத்துகள் காரணமாக விமான பயணிகள் இடையே பெரும் அதிர்ச்சி நிலவி வருகிறது.