முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 115 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : நிதியை கையாள்வது தொடர்பாக விசேட கலந்துரையாடல்!
2024 வருடத்திற்குரிய வரவு செலவுத்திட்டத்தினூடாக முறையான கிராமிய அபிவிருத்தி மூலம் பிரதேச ஏற்றத் தாழ்வுகளை குறைத்து நாட்டின் நிலையான அபிவிருத்தியை இலக்காக கொண்டதுடன் வலுவான கிராமிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலமாக பாரிய பொருளாதார இலக்கினை அடைந்து தேசிய பணிக்கு பங்களிப்பு செய்தல் எனும் நோக்கில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 115 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரிகளை தெளிவுபடுத்தும் விசேட கூட்டம் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களான ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு, வெலிஒயா, கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு என ஆறு பிரதேச செயலகங்களிலும் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலானது இறுதியாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் இன்று மாலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தலைமையில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் பங்குபற்றலுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலில் நிரல் அமைச்சுக்கள், மாகாண சபைகள் மற்றும் பிற நிறுவனங்களினால் நிதி ஒதுக்கப்படாத பொருளாதார, சமூக, சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை விருத்தி செய்வதற்குத் தேவையான பெளதீக உட்கட்டமைப்பை உருவாக்குதல் அல்லது சமூக நலனை இலக்காக கொண்ட கருத்திட்டங்களிற்காக பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளை முறையாக முதலீடு செய்தலை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு 22.50 மில்லியன் நிதியும், புதுக்குடியிருப்பு 22.50 மில்லியன், ஒட்டுசுட்டான் 20 மில்லியன், துணுக்காய் 17.50 மில்லியன் , வெலிஓயா 17.50 மில்லியன், மாந்தை கிழக்கு 15 மில்லியன் ரூபாய் என மொத்தமாக 115 மில்லியன் ரூபாய் நிதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஊடாக மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எவ்வாறு கையாள்வது தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்குரிய விளக்கங்களை வழங்கி ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலிருந்தும் திட்டங்களை அடையாளப்படுத்தி அந்த திட்டத்திற்குரிய நிதிகளை விரைவாக பெற்று மக்களுக்குரிய சேவைகளை செய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கின்றது. இதற்கு ஜனாதிபதிக்கே முதல் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
குறித்த கலந்துரையாடல்களில் கல்வி, சுகாதாரம், விவசாய, கமநல சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.