இலங்கையில் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்டம் குறித்து அறியாத மக்கள்
தற்போது சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வரும் ஒன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து மக்களிடம் மிகக்குறைவான அறிவு மட்டுமே உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வெரிட்டி ரிசர்ச் நிறுவனம் நாடு முழுவதும் இந்த ஆய்வை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்ற 66 சதவீதம் பேருக்கு இந்த சட்டம் குறித்து எதுவும் தெரியாது என தெரியவந்துள்ளது.
34 சதவீதம் பேர் மட்டுமே சட்டம் பற்றி அறிந்துள்ளனர். மேலும் 56 சதவீதம் பேர் இது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான சுதந்திரத்தை குறைக்கும் என்று கூறியுள்ளனர்.
வெரிட்டி ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் படி, இந்த சட்டமூலம் அதிக மாற்றத்தை ஏற்படுத்தாது என்று மற்றொரு 25 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
மேலும் 19 சதவீதம் பேர் சமூக ஊடகங்களின் தவறான பயன்பாடு இதன் மூலம் குறையும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் வாசிப்புக்காக நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி அமைப்புகளின் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு முக்கிய சர்வதேச நிறுவனங்கள் கூட தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
இந்த சட்டமூலம் தற்போதைய வடிவில் தாக்கல் செய்யப்பட்டால், நாட்டில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் அன்னிய நேரடி முதலீடு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.