உத்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி… செல்போனில் கார்ட்டூன் பார்த்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!
உத்தரப் பிரதேசத்தில் செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த 5 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி காமினி என்பவர், நேற்று அவரது தாயாரின் அருகில் படுத்தபடி செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுமியின் கையில் இருந்த செல்போன் கீழே விழுந்ததால் சந்தேகம் அடைந்து பார்த்தபோது எவ்வித அசைவுமின்றி படுத்திருப்பதை கண்டு தாயார் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உடனடியாக காமினியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளது அப்பகுதியைச் சேர்ந்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதே பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 12-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக அம்ரோஹா மற்றும் பிஜுனார் மாவட்டங்களில் திடீரென உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் குளிர் காரணமாக ஆக்சிஜன் அளவுகள் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை குறைவதால் இது போன்ற மாரடைப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக குழந்தை நல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அடுத்தடுத்து சிறுவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து வரும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக வடமாநிலங்களில் கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.