ஐரோப்பிய நாடொன்றில் இருந்து அனுப்பப்பட்ட பெரும் தொகை பணம் – யாழில் எரிக்கப்பட்ட கடைகள்
யாழ். நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டன. இரண்டு கோடி ரூபா பெறுமதியான பொருள்கள் இதன்போது எரிந்தழிந்தன.
அத்துடன் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது. இதைவிட மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியம் வாழ் பெரியம்மாவின் நட்பு வட்டாரத்திலிருந்து விடுக்கப்பட்ட உத்தரவுக்கு அமையவே இந்த விஷமச் செயலில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தின் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒன்றரை லட்சம் ரூபா பணமும் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.