ஆப்கன் – பாகிஸ்தான் இடையே முற்றும் மோதலால் மூடப்பட்ட எல்லை…
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே முற்றும் மோதல் காரணமாக இருநாட்டு எல்லையின் முக்கிய வாயில் மூடப்பட்டுள்ளது. இது இருநாட்டினர் இடையிலான இறுக்கம் என்பதற்கு அப்பால், ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கான இறக்குமதியை பாதிக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
பாகிஸ்தானில் தங்கியிருக்கும் சுமார் 17 லட்சம் ஆப்கன் அகதிகளை, ஆப்கானிஸ்தானுக்கு கட்டாயமாக அனுப்பும் பணிகளை பாகிஸ்தான் அரசு அண்மையில் தொடங்கியது. முன்னதாக பல தசாப்தங்களாக தொடர்ந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கானோர் ஆப்கனில் இருந்து வெளியேறி அண்டை தேசமான பாகிஸ்தானில் அடைக்கலம் பெற்றிருந்தனர்.
ஆப்கனில் தாலிபன்களின் கை ஓங்கத் தொடங்கியபோது, பாகிஸ்தானிலும் அதன் தாக்கத்தினாலான பயங்கரவாத குழுக்கள் அதிகரித்தன. அந்த குழுக்களால் பாகிஸ்தான் எல்லையிலும், உள்ளாகவும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்தன. இந்த பயங்கரவாத குழுக்களில், ஆப்கனில் இருந்து அகதிகளாக வந்தவர்களே அதிகம் இடம்பெற்றிருப்பதாக பாகிஸ்தான் கண்டறிந்தது.எனவே, ’பாகிஸ்தான் தாலிபன்’ பயங்கரவாத குழுக்களை அடக்க, ஆப்கன் அகதிகளை ஆப்கானிஸ்தானுக்கே அனுப்ப முடிவு செய்தது. இதனையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாத ஆப்கன் அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்படுவது மட்டுமன்றி, ஆப்கனில் இருந்து உள்ளே நுழைவோரையும் தீவிர தணிக்கை மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இதன்படி, ஆப்கனிலிருந்து வருகை தரும் வாகனங்களில் பயணிப்போர் உரிய பாஸ்போர்ட் மற்றும் விசா இருப்பின் மட்டுமே அனுமதிக்க முடியும் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக இருநாட்டு வர்த்தக உறவில் இந்த கெடுபிடிகள் கிடையாது என்பதால், வணிகப் போக்குவரத்தும், காய்கனிகள் பரிமாற்றமும் எளிதில் நடைபெற்று வந்தது. புதிய உத்தரவு காரணமாக ஆப்கனிலிருந்து பாக் எல்லையில் நுழைவதற்கான கனரக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துள்ளன. பாகிஸ்தானின் அதிரடியை கவனித்த ஆப்கன் அரசு, அதே வழியை பின்பற்றி பாகிஸ்தான் வாகனங்களுக்கும் தங்களது எல்லையில் தீவிர தணிக்கையை தொடங்கியுள்ளது.
இதற்கிடையே ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் வேளாண்விளை பொருட்கள் பாகிஸ்தான் வழியாகவே தரை மார்க்கமாக இந்திய எல்லைக்குள் நுழைகின்றன. பாகிஸ்தானின் புதிய கெடுபிடியால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. ஆனால், ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கான வர்த்தக வழித்தடங்கள் முறையான அனுமதி பெற்றே செயல்படுவதால், அவை பாதிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிய வருகிறது.