அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: அமெரிக்காவின் 10 மாகாணங்களின் சாலைகளில் விளம்பரம்
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் 10 மாகாணங்களில் சாலைகளில் விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள வரும் ராமர் கோயிலில் இம்மாதம் 22ம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விழாவுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அயோத்தி மாநகரத்தில் திருவிழா களை கட்டியுள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு உலகம் முழுவதும் ராம பக்தர்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் சாலைகளில் ராமர் கோயில் திறப்பு விழா குறித்த மிகப்பெரும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், பகவான் ஸ்ரீ ராமர், அயோத்தி ராமர் கோயிலின் கம்பீரமான தோற்றம் ஆகிய படங்கள் இடம் பெற்றுள்ளன.
விஸ்வ இந்து பரிஷத் (VHP) அமெரிக்க பிரிவு சார்பில் அமெரிக்காவில் உள்ள இந்துக்களுடன் இணைந்து, 10 மாகாணங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் விளம்பர பலகைகளை வைப்பட்டுள்ளன. இதில் ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்டமான ‘பிராண் பிரதிஷ்டா’ விழா நடைபெற உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ், இல்லினாய்ஸ், நியூயார்க், நியூ ஜெர்சி மற்றும் ஜார்ஜியா உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் இந்த விளம்பர பலகைகள் நிறுவப்பட்டுள்ளன. இதேபோல், அரிசோனா, மிசோரி மாகாணங்களிலும் வரும் 15ம் திகதி முதல் விளம்பர பலகைகள் நிறுவப்படும் என்று விஎச்பி அமெரிக்க பிரிவு தெரிவித்துள்ளது.