மாடுகளுக்கு பீர் ஊற்றி வளர்க்கும் மார்க்… இறைச்சி விற்பனையில் ஈடுபட திட்டம் !
உலகிலேயே மிகவும் சுவையான தரமான மாட்டிறைச்சியை விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக மெட்டா மற்றும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார்
உலகின் முன்னணி சமூக ஊடகங்களான வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனமாக மெட்டா விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் உள்ளவர் மார்க் ஜூக்கர்பர்க். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 16வது இடத்தில் இருப்பதோடு, பிரபலமானவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளவர். இவர் மெட்டா நிறுவனத்தின் மூலம் மென்பொருள், அது சார்ந்த கருவிகள் மட்டுமின்றி, மருத்துவம் உட்படப் பல ஆராய்ச்சிகளிலும் முதலீடுகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது அவர் தனது கவனத்தை இறைச்சி தயாரிப்பின் பக்கம் திருப்பியுள்ளார். உலக அளவில் இறைச்சி ஏற்றுமதிக்கான சந்தை மிகப்பெரியது. அதிலும் மாட்டிறைச்சி விற்பனை உலக அளவில் பிரபலமானது. இதில் பல்வேறு கால்நடை வளர்ப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாட்டிறைச்சி உற்பத்தியில் கால்பதிக்க உள்ளதாக மார்க் சமீபத்தில் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உலகின் சிறந்த மாட்டிறைச்சியை உருவாக்குவதற்காக முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஹவாய் தீவில் உள்ள தனது பண்ணையில், வேக்யூ – ஆங்கஸ் என்ற இரண்டு மாட்டு ரகங்களை வளர்த்து வருவதாகக் கூறியுள்ளார். அவற்றிற்கு உலகின் விலை உயர்ந்த மக்காடாமிய கொட்டைகள் உணவாக வழங்கப்படுவதாகவும், மாடுகள் அருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பீர் ஆகியவற்றைக் கொடுத்து பராமரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அவை ஆண்டு ஒன்றுக்கு 2 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோ உணவு சாப்பிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்காகப் பல நூறு ஏக்கர் மக்காடமியா மரங்களை நட்டு வளர்த்து வருவதாகவும் மார்க் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய எல்லா செயல்களைக் காட்டிலும், இது சுவையானது என்று குறிப்பிட்டு மாட்டிறைச்சி சாப்பிடும் புகைப்படத்தையும் மார்க் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.